உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0
150
Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த கர்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. இது இரு மாநில உறவுகளை பாதிக்கும்; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தென்பெண்ணையாற்றின் துணைநதிகளில் ஒன்றான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அதைப் பயன்படுத்தி மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணைகளை கட்டும் பணிகளை கர்நாடகம் எந்த நேரமும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கர்நாடக மாநிலத்தின் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோல் கிராமத்தில் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த ஆணையிட வேண்டும்; அதேபோல் பெண்ணையாற்றின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தள்ளுபடி செய்து விட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய அரசை அணுகும்படியும் ஆணையிட்டது. அதன்படி தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய நீர்வள அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றம் மறுக்க வில்லை. மாறாக, தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் தான் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. பெண்ணையாற்று பிரச்சினைக்கு தீர்வு காண தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய அரசிடம் முறையிடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதன் முடிவு வெளியாகும் வரை பெண்ணையாற்றின் குறுக்கே எந்தவொரு பாசனத் திட்டத்தையும் கர்நாடக அரசு செயல்படுத்தாமல் இருப்பது தான் அறமாகும். ஆனால், அதை மதிக்காமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த கர்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. இது இரு மாநில உறவுகளை பாதிக்கும்; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

காவிரி நதிநீர் பிரச்சினையைப் போலவே தென்பெண்ணையாற்று பிரச்சினையிலும் கர்நாடக அரசு அத்துமீறி செயல்பட்டு வருகிறது. 1892ஆம் ஆண்டில் சென்னை – மைசூர் மாகானங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆறும் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி முதல்மடை பாசனப் பகுதிகளில் எதை செய்வதானாலும், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும். ஆனால், தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் கடந்த 2012-ஆம் ஆண்டு பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கர்நாடக அரசு கட்ட முயன்ற போது, அதை எதிர்த்து பா.ம.க. போராட்டங்களை நடத்தியது. அதன்பிறகே கட்டுமானப் பணிகளை கர்நாடகம் கைவிட்டது.

அதுமட்டுமின்றி, 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள முகளூர் தத்தனூர் என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் ராட்சத ஆழ்துளை கிணறுகளை அமைத்து, அதன் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கொண்டு சென்று அங்குள்ள 130 ஏரிகளில் சேமித்து வைத்து குடிநீர் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டமும் கைவிடப்பட்டது. அதேபோல் இப்போதும் பெண்ணையாற்றின் குறுக்கே பாசனத் திட்டங்களை கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடும்.

தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் தோன்றினாலும் அம்மாநிலத்தில் மிகக் குறைந்த தொலைவுக்கு மட்டுமே ஓடுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஓடி கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

எனவே, தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கத்துடன், தீர்ப்பாயத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும் வரை பெண்ணையாற்றில் பாசனத் திட்டங்களை செயல்படுத்த கர்நாடகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.