வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்
தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
காடவராயர் குலத்தைச் சேர்ந்த மாமன்னனும், நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியவருமான கோப்பெருஞ்சிங்கனின் 770-ஆவது பிறந்தநாள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களை செயல்படுத்திய மாமன்னனின் பெருமைகள் வெளி உலகிற்கு கொண்டு வரப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பல்லவப் பேரரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், அவர்களின் வாரிசுகள் காடவராயர்கள், சம்புவராயர்கள் என இரு பிரிவாக பிரிந்து தங்களுக்கென சிற்றரசுகளை ஏற்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலை மாவட்டம் படைவீட்டையும், காடவராயர்கள் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். காடவராயர்கள், வம்புவராயர்கள் ஆகிய இருவருமே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி செய்தனர் என்ற போதிலும், காடவராயர்கள் தங்களின் வலிமையால் ஆட்சியை விரிவுபடுத்தியதுடன், சக சிற்றரசர்களுக்கு காவலாகவும் திகழ்ந்தனர்.
காடவராயர் குலத்தின் முதல் அரசரான மணவாளப் பெருமாள் விழுப்புரம் மாவட்டம் சேந்த மங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். கலையிலும், இறைவழிபாட்டிலும் இணையற்ற ஈடுபாடு கொண்ட இந்த மன்னர் தான், சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினார். இக்கோவில் குளத்தருகில் உள்ள கருங்கல் குதிரை சிலைகளை ஒவ்வொரு இடத்தில் தட்டும் போதும் வெவ்வேறு ஒலி எழும்பும் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் கோப்பெருஞ்சிங்கன் வீரத்தின் விளைநிலமாக விளங்கினான். இவரது காலத்தில் காடவராயர்களின் ஆட்சிப் பகுதி வடக்கே ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி, தெற்கே நன்னிலம், கிழக்கே வங்கக்கடல், மேற்கே சேலம், தருமபுரி மாவட்டங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டது.
காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார். பின்னர் கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனரும், சோழ மன்னருமான மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார். கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் அவர் கொடுத்த ஆதரவால் சம்புவராயர்கள், காடவராயர்கள், வானகோவரையர்கள், சேதிராயர்கள், கச்சிராயர்கள், நீலங்கரையர்கள் உள்ளிட்ட சிற்றரசர்கள் வலிமை படைத்தவர்களாக மாறினார்கள்.
சோழர்கள் காலத்தில் எவ்வாறு கல்லணை கட்டப்பட்டு நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தல், தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஆகியவை கட்டப்பட்டனவோ, அதே போல் காடவராயர்கள் காலத்திலும் இறைவழிபாடு, நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கி.பி. 1076 முதல் 1279 வரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக வட தமிழ்நாட்டை ஆட்சி செய்த காடவராயர்கள், சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தை புதுப்பித்ததுடன், கிழக்கு கோபுரத்தை புதிதாக உருவாக்கினர். தில்லைக் காளி கோயிலை கட்டியதும் இவர்கள் தான்.
கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, புதுச்சேரியில் திருபுவனை ஏரி, ஒழுகரை ஏரி ஆகியவற்றை அமைத்து அந்தப் பகுதிகளில் நீர்மேலாண்மையை மேம்படுத்தியவர்களும் காடவராயர்கள் தான். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் அணை கட்டி காவிரி சிறை வைக்கப்பட்ட போது, படையெடுத்துச் சென்று அணையை உடைத்து காவிரியை மீட்டவர்கள் காடவராயர்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இவர்களைப் போலவே படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சம்புவராயர்களும் மக்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்கள்; மக்களால் போற்றப்பட்டனர்.
இத்தகைய சிறப்பு மிக்க காடவராயர்களும், சம்புவராயர்களும் வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்டனர். நீர் மேலாண்மை, கட்டிடக்கலை, இசை, கோட்டைகள் அமைத்தல், போர்க்கலை உட்பட ஏராளமான திறமைகளின் அடையாளமாக திகழ்ந்த இவர்களின் வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் அந்த கலைகள் குறித்து இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் காடவராயர்களின் ஆளுகையிலும், சம்புவராயர்கள் ஆளுகையிலும் இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ள முடியும். ஆனால், இந்த மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
காடவராயர்களின் சந்ததியினரான கச்சிராயர்கள் இப்போதும் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசாபரூரிலும் கடலூரின் அருகில் உள்ள தியாகவல்லியிலும் வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லாமல் சாதாரண மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாகத் தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், பா.ம.கவினரும் இணைந்து ஆவணி திருவோண நட்சத்திர நாளில் காடவராய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொண்டாடப்பட வேண்டிய ஒரு மன்னனின் வரலாறு மறைக்கப்படுவதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். கோப்பெருஞ்சிங்கனுக்கு சேந்தமங்கலத்திலும், சம்புவராயர்களுக்கு படைவீட்டிலும் மணி மண்டபம் கட்டப்பட வேண்டும். இவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதுடன், இவர்களின் ஆட்சி வரலாற்றை பாடநூல்களில் பாடமாக சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.