Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதை செயல்படுத்துவது என்ற அடுத்தக்கட்டத்திற்கு எங்களால் செல்ல முடியாது என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு என்று தனி அமைச்சகம் கிடையாது. ஆனால், சமூகநீதியை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தான் உள்ளது. அதை உணர்ந்து சமூகநீதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் காக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியாக இருந்தாலும், வன்னியர் சங்கமாக இருந்தாலும் அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் சமூகநீதியை பாதுகாப்பது தான். 1980-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் தான் 10 ஆண்டுகள் தொடர் போராட்டங்களை நடத்தி, 21 உயிர்களை தியாகம் செய்து வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கச் செய்து 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 22.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடும், இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களின் பயனாகவே வழங்கப்பட்டன.

தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் கிடைத்தது தான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் 27% இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நான் போராடியதால் தான் அது சாத்தியமானது. அந்த வகையில் தான்கல்வியிலும், சமூகத்திலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 41 ஆண்டுகளாக ஏராளமான அறப்போராட்டங்களை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன்.

வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டில் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் வரை 6 கட்டங்களாக தொடர் போராட்டங்களை வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்தின. அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

அந்த சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை உயர்கல்வித்துறையால் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு விட்டது. மற்ற துறைகளிலும் இதேபோன்ற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும். அவற்றின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சகத்தின் முதன்மைப் பணியாகும்.

கல்வியைப் பொறுத்தவரை சட்டப்பல்கலைக்கழகத்தில் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டு விட்டது. அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. மருத்துவத்துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓமியோபதி மருந்து வழங்குனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு 555 பேரை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையில் முந்தைய இட ஒதுக்கீட்டு முறையே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து, வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த இரு நடவடிக்கைகளும் தவறானவையாகும்.

பணி நியமனங்கள் தொடர்பான இந்த அறிவிக்கைகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு இடம் பெறாதது தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகம் தான் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டு, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் துறையின் அமைச்சரே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கிறார் என்றால், இது அவரது நிலைப்பாடா…. இல்லை அரசின் நிலைப்பாடா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சமூகநீதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு முறை புதிய இட ஒதுக்கீடுகள் சட்டமாக்கப்படும் போது அதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் வழக்குத் தொடர்வது வாடிக்கையானது தான். தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 100% இட ஒதுக்கீட்டை ஒழிக்க செண்பகம் துரைராஜன் வழக்கு தொடர்ந்த நாள் முதல் இத்தகைய வழக்குகள் தொடரப்பட்டு தான் வருகின்றன. ஆனால், அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்காத வரை, அதை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை. இது தான் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 1994-ஆம் ஆண்டில் தொடங்கி 27 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு வழக்கு எங்காவது ஒரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் கூட இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், 27 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்த வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளன; இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும், அந்த இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காரணம்…. அந்த இட ஒதுக்கீடுகளுக்கு எந்த நீதிமன்றத்திலும் தடை விதிக்கப்படவில்லை என்பது தான்.

அதேபோல், தேசிய அளவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கான ( Economically Weaker Section- EWS) 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு இரண்டரை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முதலில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட அவ்வழக்கு இப்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், தேசிய அளவில் கல்வி – வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள போதிலும், அவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அவ்வாறு இருக்கும் போது வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுப்பது சட்டத்தையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும்; இது தவிர்க்கப்பட வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தவறுகளை களைய வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக இதுவரை பிறப்பிக்கப்பட்டுள்ள இரு அறிவிக்கைகளையும் திரும்பப்பெற்று, வன்னியர் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து புதிய அறிவிக்கைகளை வெளியிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை நடத்துவதற்கு சமூகநீதியில் அக்கறையும், வல்லமையும் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version