Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விதிகளை மதிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அமைச்சகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

விதிகளை மதிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அமைச்சகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

காவிரி டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

காவிரி பாசன மாவட்டங்களில் 8 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்காக அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியாகவுள்ள நிலையில், அந்த அனுமதியை 2023-ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை பிறப்பித்திருக்கிறது. உழவர்களின் நலனை பாதிக்கும் வகையிலான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை நியாயமற்றது: கண்டிக்கத்தக்கது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதியில் 24 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு கடந்த 2013-ஆம் ஆண்டில் அனுமதி அளித்தது. அவற்றில் 16 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 8 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த கிணறுகளை அமைப்பதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி விரைவில் காலாவதியாகவுள்ளது. அதை நீட்டித்து வழங்கும்படி ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தது. அதையேற்று 8 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை 2023-ஆம் வரை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ஆணையிட்டிருக்கிறது. இது சரியல்ல.

காவிரி பாசன மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஏற்கனவே, 200-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ளது. அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதில் வெற்றியும் பெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசு, இப்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களைத் தவிர புதிய திட்டங்களைச் செயல்படுத்த தடையும் விதித்தது.

ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த எந்த விதிகளையும் மதிக்காமல், ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க முயல்வதும், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் துணை போவதும் உழவர்களுக்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத துரோகங்களாகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் 24 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2013-ஆம் ஆண்டில் அனுமதி அளித்தது உண்மை தான். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தத் திட்டங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், அவை காலாவதியானதாகவே கருதப்பட வேண்டும். இதுவரை அமைக்கப்படாத 8 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரினால், அவை புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகளின்படி புதிய தொழிற்திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்பதால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, ஓஎன்ஜிசி 8 கிணறுகளை அமைக்க அனுமதி அளித்திருப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யப்படும் கேடாகும். இது சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதையே சிதைக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தும் எந்த திட்டங்களுக்கும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை. இது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வெகுமதி அளிப்பது போன்று, 8 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க அனுமதி அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே காவிரி பாசன மாவட்டங்கள் கடும் வறட்சியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு வேளாண் சாகுபடி பரப்பும் குறைந்து வரும் இந்த நிலையில், தற்போது புதிதாக செயல்படுத்தப் படவுள்ள இந்தத் புதிய எண்ணெய் கிணறுகள் திட்டம், காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும். இதை தடுக்க வேண்டும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 8 எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அளிக்கப்பட்ட ஆணையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version