தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்
தமிழரின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திய கீழடி அகழாய்வில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதை மறைக்க பார்க்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் “கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் ⁿ என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்திய கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில் செய்யப்படும் கால தாமதம் மிகவும் வருத்தமளிக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் கீழடி அகழாய்வு தொடர்பான வினாக்களுக்கு விடையளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் இல்லை என்றாலும் கூட, அகழாய்வு நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் மாநில அரசின் மூலம் அருங்கட்சியம் அமைக்கப்படும்; அகழாய்வு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றால் அதற்கான பரிந்துரை தமிழக அரசிடமிருந்து தான் செய்யப்பட வேண்டும். தமிழக அரசு அத்தகைய பரிந்துரையை இன்னும் செய்யாத நிலையில், கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாதோ? என்ற அச்சம் தேவையில்லை.
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது உயர்நிலைத் தகுதி அல்ல. மாறாக, தொல்லியல் ஆய்வு நடைபெற்று வரும் ஓர் இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலம் அப்பகுதியில் நிலங்களை மிகவும் எளிதாக கையகப்படுத்த முடியும். கீழடியைப் பொறுத்தவரை மிகவும் குறைந்த பரப்பளவிலான பகுதிகளில் தான் இதுவரை தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தம் 5 கட்ட ஆய்வுகளில் 110 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றிலிருந்து கிட்டத்தட்ட 15,000 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்ட ஆய்விலும் கண்டெடுக்கப்படும் பொருட்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகளை காண முடிகிறது. முதல் நான்கு கட்ட ஆய்வுகளின் மூலமாகவே தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என நிறுவ முடிந்துள்ள நிலையில், ஆய்வு நடைபெறும் பகுதியை பலநூறு ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் தமிழர் நாகரிகம் இன்னும் பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவுவது சாத்தியமாகும்.
கீழடி குறித்த ஆய்வுக்கு நிலம் வழங்க அப்பகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றாலும் கூட, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலம் நிலம் எடுப்பது இன்னும் எளிதாகும். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுப் பகுதி கூட ஆங்கிலேயர் காலத்திலேயே பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்க தமிழக அரசு பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை. இனி வரும் காலங்களில் அகழாய்வு செய்ய வேண்டிய பகுதிகளைஅளந்து, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தாலே போதுமானது. ஆய்வுக்கு நிலம் வழங்க மக்கள் தயாராக இருப்பதாலும், அதற்கான இழப்பீட்டை வழங்க அரசுகள் தயாராக இருப்பதாலும் இதில் எந்த சிக்கலும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்கான தேவை இப்போதைக்கு எழவில்லை என்றும், ஆறாம் கட்ட ஆய்வுக்குப் பிறகே இது குறித்து ஆராயப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார். இதற்காக அதுவரை காத்திருக்கத் தேவையில்லை. உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் நகருக்கு அருகிலுள்ள சனவுலி கிராமத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் அகழாய்வு தொடங்கப்பட்டது. அங்கு கி.மு.2000 முதல் கி.மு.1800 வரையிலான காலத்தைச் சேர்ந்த தேர் உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 28.67 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ரூ.6,000 கோடி நிதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆனால், அதற்கெல்லாம் முன்பாக 2015-ஆம் ஆண்டிலேயே அகழாய்வுகள் தொடங்கப்பட்ட கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிப்பதற்காக இன்னும் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கீழடி அகழாய்வை விரிவுபடுத்தவும், அருங்காட்சியகத்தை திட்டமிட்டதை விட பிரமாண்டமாக அமைக்கவும் வசதியாக மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியையும் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.