Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசை! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட மலரும் நினைவுகள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசைப்படுவதாக மருத்துவர் ராமதாஸ் தனக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மலரும் நினைவுகளாக முகநூலில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது.

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உள்ள கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இராமநாதனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று காலை தொலைபேசியில் வாழ்த்துக் கூறியபோது ஒரு இனிமையான மலரும் நினைவுகள்….

மருங்கூர் இராமநாதனின் மகன் இராம்பிரசாத். அவரும் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். இராமநாதனின் மூத்த மகளும் குடிமைப் பணி தேர்வுக்காக தில்லியில் தயாராகி வருகிறார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக இப்போது இருவரும் கடலூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.

இராமநாதனின் மகன் இராம்பிரசாத் என் மீதும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது பா.ம.க. மீதும் பற்று கொண்டவர். ஒருமுறை நான் சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருந்தேன். அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த இராம்பிரசாத், காரை நிறுத்தி விட்டு, எனது காரை நோக்கி ஓடி வந்தார். அதற்குள் சிக்னலில் இருந்து புறப்பட்டு விட்டேன். ஒரு இளைஞர் ஓடி வருவதை பார்த்த நான் காரை நிறுத்தும்படி கூறினேன்.

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

அந்த இளைஞனை அழைத்து விசாரித்த போது தான், அவர் மருங்கூர் இராமநாதனின் மகன் என்பது தெரியவந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்ட போது, ஐ.ஏ.எஸ் படித்துக் கொண்டிருப்பதாகவும், கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் லட்சியம் என்றும் கூறினார். அதற்காக இராம் பிரசாத்தை ஊக்கப்படுத்திய நான், ’’நீ கலெக்டர் ஆனால், நான் உனக்கு டிரைவராக வந்து கார் ஓட்டுகிறேன்” என்று கூறினேன். அதைக் கேட்டு அந்த இளைஞர் மகிழ்ச்சி அடைந்தார். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை பெரிதாக்கி அவரது வீட்டில் மாட்டி வைத்திருப்பதாக அவரது தந்தை இன்று என்னிடம் கூறினார்.

சகோதரி ஐஸ்வர்யாவைப் போலவே இராம்பிரசாத்தும், அவரது மூத்த சகோதரியும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இராம்பிரசாத் ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டர் ஆனவுடன் ஏற்கனவே உறுதி அளித்தவாறு அவருக்கு ஒரு நாள் கார் ஓட்ட ஆசையுடன் இருக்கிறேன்; காத்திருக்கிறேன்!

கழனியில் உழைத்த பாட்டாளி சொந்தங்கள் கலெக்டர் ஆகும் போது, அவர்களுக்கு கார் ஓட்டுவதை விட வேறு மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் எனக்கு? என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version