நாடு முழுவதும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் விவசாய மசோதா குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல்,லாபத்துடன் கூடிய விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்! என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா ஆகியவையும், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த உழவர்களின் அச்சமும் தான் நாட்டின் முக்கிய விவாதமாக மாறியுள்ளன. எந்த சட்டத்தாலும் உழவர்களின் நலன்கள் இம்மியளவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள இரு சட்டங்களாலும், மாநிலங்களவையில் இனி நிறைவேற்றப்படவுள்ள அத்தியாவசியப் பொருட்கள்(சட்டத்திருத்த) மசோதாவாலும் வேளாண் விளைபொருட்களை அரசுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்வது காலப்போக்கில் நிறுத்தப்பட்டு விடும்; அதனால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் வழக்கமும் இல்லாமல் போய்விடும் என்பது தான் உழவர்களின் அச்சமாகும். இது குறித்த உத்தரவாதம் சட்ட மசோதாக்களில் இல்லாத சூழலில் உழவர்களின் இந்த அச்சம் நியாயமானது தான். உழவர்களின் இந்த அச்சத்தைப் போக்கி, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடமையாகும்.
உழவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், நேரடி கொள்முதல் முறையும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யும் முறையும் தொடரும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது தான். பிரதமரின் இந்த அறிவிப்பை சட்டமாக்கி விட்டால், நாடு முழுவதுமுள்ள உழவர்களின் அச்சத்தை முழுமையாக நீக்கிவிட முடியும்.
இந்தியாவில் இன்றைய நிலையில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால், அது உழவர்கள் தான். அவர்கள் பயிரை சாகுபடி செய்யும் போது இயற்கைச் சீற்றங்களின் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர். சாகுபடி செய்து முடித்த பிறகு அவற்றுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை என்றைக்கு கிடைக்கிறதோ, அன்றைக்கு தான் விவசாயம் லாபம் நிறைந்த தொழிலாக மாறும்; உழவர்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
உழவுத்தொழிலை லாபமானதாக மாற்ற வேண்டுமானால், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தவாறு வேளாண் விளைபொருட்களுக்கு, அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு விட்டதாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அது உற்பத்திச் செலவுகளை முழுமையாக சேர்க்காமல் கணக்கிடப்பட்டது என்பதால், அது எந்த வகையிலும் உழவர்களுக்கு பலன் அளிப்பதாக அமையவில்லை. தமது பரிந்துரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களே தெரிவித்திருக்கிறார்.
உதாரணமாக, நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்தி செலவு ரூ.1,871.32 ஆகும். ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1868 மட்டும் தான். குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்திச் செலவை விட குறைவாக இருக்கும் போது அவர்களுக்கு எவ்வாறு லாபம் கிடைக்கும்? நெல்லுக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும்போது, விவசாயியின் மனித உழைப்பில் தொடங்கி, நீர் பாய்ச்சுவதற்கான செலவுகள் வரை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால், பெரும்பான்மையான செலவுகளை கணக்கில் கொள்ளாமல் உற்பத்தி செலவை மத்திய அரசு நிர்ணயித்திருப்பது தான் கொள்முதல் விலை குறைவாக இருக்க காரணமாகும்.
அதேபோல், கொள்முதல் நிலையங்கள் போதுமான எண்ணிக்கையில் அமைக்கப்படுவதில்லை என்பதும் உண்மை ஆகும். தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களில் போதிய கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படாததால், உழவர்கள் தாங்கள் விளைவித்த நெல்லை சாலைகளில் கொட்டி, இரவுபகலாக காவல் காக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றப்பட்டால் தான் உழவர்களின் துயரம் தீரும்.
எனவே, நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்; எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளின்படி உழவர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவை உழவர்கள் விரும்பும் வரை நீடிப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.