மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் அலட்சியமா? தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

0
170
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் அலட்சியமா? தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதியுறும் நிலையில் பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட நிலையில், 20% ஆசிரியர்கள் மட்டும் தான் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை காட்டும் அலட்சியம் பெரும் வேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பும் நோக்குடன் 13,331 ஆசிரியர்களை சில மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்துவதற்கான அறிவிக்கையை கடந்த ஜூன் 23-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. ஆனால், அதன்பின் இரு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்று வரை 20% ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை.

மதுரை உயர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 மாவட்டங்களில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், 2,600 ஆசிரியர்கள் மட்டும் தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தற்காலிகமாக நிரப்ப திட்டமிடப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 10,731 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

கோடை விடுமுறைக்குப் பிறகு கடந்த ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்பின் 73 நாட்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த சில நாட்களில் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. ஆனால், பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் பாடங்களே நடத்தப்படாத நிலையில், மாணவர்களால் காலாண்டுத் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?

ஆசிரியர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்படுவது வட மாவட்டங்களின் பள்ளிகள் தான். தமிழகத்தில் ஏற்கனவே 3800 பள்ளிகளில் ஓராசிரியர்கள் தான் உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன.

அதேபோல், இப்போது தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டிருந்த 13,331 பணியிடங்களில் 11,874 இடங்கள் வட மாவட்டங்களில் உள்ளன. அந்த இடங்கள் நிரப்பப்படாததால் வட மாவட்ட மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த அவல நிலைக்கு பள்ளிக்கல்வித் துறை தான் காரணம் ஆகும். ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதாக தமிழக அரசு அறிவித்த போதே, அதை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்தது. தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்பதால் அது சமூக அநீதியாக அமைந்து விடும் என்று எச்சரித்த பாட்டாளி மக்கள் கட்சி, அனைத்து இடங்களையும் நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் ஒருமுறை போட்டித் தேர்வுகளை எழுதும்படி கட்டாயப்படுத்தத் தேவையில்லை; அவர்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி நிரப்பலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி யோசனை தெரிவித்திருந்தது.

அதை அரசு ஏற்றுக்கொண்டிருந்தால் பல வாரங்களுக்கு முன்பே நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அதனால், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கான தடையை உயர்நீதிமன்றம் நீக்குவதோ, மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் வருவதோ உடனடியாக நடப்பதற்கு சாத்தியம் இல்லை. உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நடப்பு கல்வியாண்டு முழுவதும் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு பள்ளிக்கல்வித் துறையே காரணம் ஆகி விடக் கூடாது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அவர்களை போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் பணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுத்து உடனடியாக நியமிக்க வேண்டும்.

அதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.