Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆந்திராவில் ஏற்பட்டது போல தமிழகத்தில் நடந்து விட கூடாது என எச்சரிக்கும் ராமதாஸ்

Dr Ramadoss

Dr Ramadoss

சமீபத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தை போல தமிழகத்திலும் ஏற்பட்டு விட கூடாது என்றும்,தமிழக அரசு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

சென்னை மணலி பகுதியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவை காரணமாக கூறி தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து இன்று அவர் “வாயுக்கசிவு ஆபத்து: அனைத்து இரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்க!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

சென்னையின் புறநகர் பகுதியான மணலியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கேடுகளையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற வேதிப்பொருள் ஆலைகளிலும் நிகழ்ந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மணலி பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த சில மணி நேரங்களில் இப்பாதிப்புகள் குறைந்து விட்டன என்ற போதிலும் நேற்றிரவு வரை அப்பகுதிகளில் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியுள்ளது. திறந்த வெளிகளில் காய வைக்கப்பட்டிருந்த துணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமடைந்துள்ளன.

மணலி பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதற்கு காரணம், அப்பகுதியில் செயல்பட்டு வரும் யூரியா தொழிற்சாலை பராமரிப்பு பணிகளுக்காக நேற்று மூடப்பட்ட போது, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதது தான். யூரியா தொழிற்சாலையிலிருந்து மிகக் குறைந்த அளவிலேயே அம்மோனியா வாயு கசிந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டது போன்று அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், மிக அதிக அளவில் கசிந்து இருந்தால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

Dr Ramadoss Warns TN Govt in Chemical Company Opening-News4 Tamil Online Tamil News
Dr Ramadoss Warns TN Govt in Chemical Company Opening-News4 Tamil Online Tamil News

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேதிப்பொருள் ஆலைகள் செயல்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்தியாவின் வேதிப்பொருள் உற்பத்தியில் 6% தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 2588 வேதிப்பொருள் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. அதிக எண்ணிக்கையில் வேதிப் பொருள் ஆலைகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள வேதி ஆலைகளில் வாயுக்கசிவு உள்ளிட்ட எந்த விபத்துகளும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் ஆலைகள் செயல்படுவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு விட்ட போதிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆலைகள் மட்டுமே செயல்படத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள ஆலைகள் அடுத்து வரும் வாரங்களில் தான் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன. இதுவரை மூடப்பட்டிருந்த ஆலைகள் செயல்படத் தொடங்கும் போதோ, செயல்பட்டு வரும் ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்கும் போதோ வாயுக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7&ஆம் தேதி மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது. அப்போது பாதுகாப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படாததன் காரணமாக, அந்த ஆலையில் 2000 டன் ஸ்டைரின் வேதிப்பொருள் திரவம் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெப்பநிலை அதிகரித்து ஆவியாகத் தொடங்கியது. ஸ்டைரின் திரவம் வாயுவாக மாறி பரவத் தொடங்கியதால், ஆலையைச் சுற்றி 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். இந்த வாயுக்கசிவால் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் வேதி ஆலைகள் உள்ளன. குறிப்பாக திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆபத்தான வேதிப்பொருள் ஆலைகள் உள்ளன. எனவே, தமிழகத்தின் எந்தப் பகுதிகளிலும் வாயுக்கசிவு உள்ளிட்ட வேதி விபத்துகள் நடக்காமல் தடுக்க, இதுவரை செயல்படத் தொடங்காத ஆலைகளிலும், செயல்படத் தொடங்கிய ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் இந்த ஆய்வுகளை நடத்தி, அதன் மூலம் வேதி விபத்துகளைத் தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

#LatestNews #BreakingNews

Exit mobile version