Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் மரணம்! உடல்களை டிராக்டரில் கொண்டு சென்ற அவலம்!

தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடியில் உள்ள சோமசுந்தரம் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுத்தம் செய்ய வந்துள்ளனர். முதலில் இசக்கி ராஜா என்பவரும், பாலா என்பவரும் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்துள்ளனர். பின்னர் நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை.

உடனே தொட்டியில் இறங்கி பார்ப்பதற்காக தினேஷ் இறங்கியுள்ளார். இவரும் வெளியே வராத காரணத்தால் கடைசியாக பாண்டியும் தொட்டியில் இறங்கியதாக கூறப்படுகிறது. வேலை பார்த்தவர்கள் வெளியே வராத காரணத்தால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் எட்டிப்பார்த்தபோது நால்வரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நால்வரின் உடலையும் மீட்டனர். அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அமரர் ஊர்தியில் கொண்டு செல்லாமல் டிராக்டரில் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. சில நாட்களாக தூத்துக்குடியில் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Exit mobile version