பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் ஆறு மாத காலத்திற்கு லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி,பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு )ராஜராஜன் தலைமையிலான ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 84 தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது.
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் கூறும்போது, 108 வாகனங்களில் 84 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த வாகனங்களில் குறைபாடுகள் இருப்பின் அதை திருப்பி அனுப்பி சரிசெய்து வரும்படி அறிவுறுத்தபடும்.
பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த கவனமுடன் பேருந்துகளை இயக்க வேண்டும். குழந்தைகள் பேருந்தில் ஏற்றும்போது அவர்கள் முழுமையாக ஏறி இருக்கையில் அமர்ந்துவிட்டனரா என்பதை கவனித்தும், அதேபோல் பேருந்தில் இருந்து குழந்தைகள் இறங்கிய பிறகு பெற்றோரிடம் சேர்ந்துவிட்டனரா என்பதை உறுதி செய்த பின்னர் பேருந்தை இயக்க வேண்டும் என்று ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்தில் தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும். பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் ஆறு மாத காலத்திற்கு அவர்களது லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும் என்று கூறினார்.