திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!
திமுகவின் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு கவலையில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.
தனது சொந்த ஊரான வேலூர் காட்பாடியில் பொங்கல் நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி போனாலும் கவலையில்லை, அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை என தெரிவித்தார்.
கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என டி.ஆர். பாலுவின் பதிலையே தானும் தெரிவிப்பதாக கூறினார்.
கடந்த 14 ஆம் தேதி டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் கூடியது. பாஜகவின் எதிர் நிலைப்பாடு கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்திற்கு மம்தா, மாயாவதி போன்ற அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. காங்கிரசின் நீண்டகால தோழமை கட்சியான திமுகவும் கலந்து கொள்ளாதது காங்கிரஸ் தலைவர்கள் இடையே தேவையற்ற வெறுப்பை உண்டாக்கியது.
இது சம்பந்தமாக, கூட்டணி தர்மத்தை மீறியதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியும், அவரது கட்சியினரும் முன்பு குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டின் காரணமாகவே காங்கிரஸ் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், கூட்டணி குறித்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று டி.ஆர்.பாலு அண்மையில் செய்தியாளர்களிடம் பதில் அளித்திருந்தார்.
கூட்டணி தர்மத்திற்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கை வெளியிட்ட கே.எஸ்.அழகிரி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரியின் அறிக்கையின்படி காங்கிரஸில் இருந்து திமுக வெளியேற்றிவிட்டது என்றே கூறலாம்.
இந்த சம்பவங்களின் காரணமாக திமுக, காங்கிரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து நிரந்தரமாக இருகட்சிகளும் கூட்டணியை விட்டு வெளியேறும் என்ற நிலையும் உருவாகியுள்ளது.