உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் ரஷ்யா கடுமையான போர் தொடுத்து வருகிறது ஒரு மாதத்தை கடந்த பிறகும் அந்தப் போர் நீடித்து வருகிறது.தன்னந்தனியாக போராடி வரும் உக்ரைனுக்கு பல நாடுகளும் மறைமுகமாக உதவி புரிந்து வருகின்றன.
ஆனால் அந்த நாட்டிற்கு ஆதரவாக இதுவரையில் எந்த நாடும் போரில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முதல் முடுக்கிவிடப்பட்டது. தற்சமயம் சற்றேறக்குறைய 90 சதவீத மக்கள் இந்தியா அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மக்களவை உறுப்பினர் பிரேம் சந்திரன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணிஷ் திவாரி, உள்ளிட்டோர் அரசியலமைப்புச் சட்டம் விதி 193 ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பதிலளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை மாநிலங்களவையில் கடந்த 15ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.