Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி!

வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்ததை அடுத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் இளைய தளபதி விஜய் நடித்த படங்கள் தான் துணிவு மற்றும் வாரிசு. இருவரின் படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் ரிலீஸ் செய்யப்படும் தேதி வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இதனை அடுத்து இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படமும் தளபதி படமும் ஜனவரி 11 அன்று மோதுகின்றன.

இரண்டு படங்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியிடப்படுவதால் அவர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இணையதளத்தில்  தங்களது போட்டியை காண்பித்து வருகின்றனர். இதனால் எந்த நடிகரின் படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினி, அஜித், விஜய்,போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் அதிகாலை சிறப்பு காட்சிகள் ஒரு மணிக்கு நான்கு மணிக்கு நடைபெறும். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து முன் பதிவு செய்யும் ஏராளமான ரசிகர்கள் விஜய் அஜித்துக்கு உண்டு.

இத்தகைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை என்னும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதைஅடுத்து ஜனவரி 13, 14 ,15,16 ஆகிய தேதிகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் திரையரங்குகளில் உள்ள உயரமான பேனர்களுக்கு பால் அபிஷேகம் ரசிகர்கள் செய்யக்கூடாது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அனுப்பியுள்ள செய்தியில்,

வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ஜனவரி 13 முதல் 16 வரை ரத்து.

நடிகர்களின் உயரமான பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்ய தடை.

டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் அதிகரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version