லைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி!
ஒருவரை நட்பு ரீதியாக ஏமாற்றலாம் என்றால், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். அதற்காக இப்படி ஒரு தில்லுமுல்லு வேலையை மூன்று பேர் சென்ற சேர்ந்த கும்பல் ஒன்று சேர்ந்து செய்துள்ளது. சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில், தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் தினேஷ். 28 வயதான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு அதே இடத்தை சேர்ந்த சையது பக்ரூதீன் 36 வயது, மீரான் மொய்தீன் 49 வயது மற்றும் முகமது மானஸ் 21 வயதானவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் ஷேர்மி என்ற செல்போன் செயலியில் வரும் வீடியோக்களை, லைக் அண்ட் ஷேர் செய்து அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்தால் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதற்கு முன்பணமாக முப்பதாயிரம் கட்டவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய தினேஷ் அவர்களிடம் முன்பணமாக 30 ஆயிரத்தை கொடுத்து, அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலில் உள்ள வீடியோக்களை லைக் அண்ட் ஷேர் செய்த சிறிது நேரத்தில் எல்லாம் அந்த செயலி செயல்படவில்லை.
அப்போதுதான் அவருக்கு அது போலியானது என்பது தெரியவந்தது. அவர்கள் மூவரும் நூதன முறையில் தன்னிடம் போலியான செயலி மூலம் பண மோசடி செய்து இருப்பதை அறிந்து அதிர்ந்தார். எனவே இதுகுறித்து மாதவரம் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணி பகுதியில் இருந்த சையது பக்ருதீன், மீரான் மொய்தீன், முகமது மானஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.