வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது சென்னைக்கு அருகே இன்றைய தினம் மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், சென்னையில் நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் ஆரம்பித்த மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்ததாக சொல்லப்படுகிறது.
அதோடு தற்போது வரையில் சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், மழைநீர் தேங்கி இருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிற காரணத்தால், மழையின் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இதில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுப்பது, மழை நீர் சூழ்ந்து இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க இருக்கின்ற நிவாரண உதவி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு போன்ற முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்று இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகின்றது.