வன்னியர்களுக்கு தனி உள்இடஒதுக்கீடு எடப்பாடி சூசகமாக அறிவிப்பு! ஸ்டாலினை‌ மண்ணை கவ்வச்செய்ய அதிரடி வியூகம்

0
160

வன்னியர்களுக்கு தனி உள்இடஒதுக்கீடு எடப்பாடி சூசகமாக அறிவிப்பு! ஸ்டாலினை‌ மண்ணை கவ்வச்செய்ய அதிரடி வியூகம்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று நடைபெற்ற தமிழக முன்னாள் அமைச்சரும் வன்னியர் சமுதாயத்தில் முக்கிய தலைவருமான மறைந்த திரு. இராமசாமி படையாச்சி அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று திறந்துவைத்தார்.

இதனை தொடர்ந்து விழா கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், என்னை சந்திக்கும் போதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் ஆகியோர்கள் ஒரு வேண்டுகோளை வைத்துக்கொண்டே இருப்பார்கள், அந்த வேண்டுகோள் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அதிரடியாக தெரிவித்தார். என்ன கோரிக்கை என்பது பற்றி முதலமைச்சர் தெரிவிக்கவில்லை.

இதனை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டியது ஒன்றுதான்!

இடஒதுக்கீட்டிற்கு அடித்தளமிட்டு 21 வன்னியர்களை பலிகொடுத்து வாங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வைத்து வரும் நீண்ட நாள் கோரிக்கையாகும். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு கோப்புகளை தயார் செய்து வைத்தார் எனவும், அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி அவர்கள் இதனை மறைத்து தன் சமுதாயத்தையும் சேர்த்து 107 சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இணைத்து விட்டார் என்பது பாமக வின் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் மிகப்பெரும்பான்மை வன்னிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தனி இடஒதுக்கீடு தங்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான். இதனையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இராமசாமி படையாச்சி விழாவில் பேசியது, வன்னியர்களுக்கு விரைவில் தனி உள் ஒதுக்கீடு வழங்க அரசின் ‌பரிசீலினையில் உள்ளது பற்றி தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர், ஏனெனில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்னியர்கள் பலமிக்க தொகுதி என்பதாலும், அதேபோல் வரும் 2021ல் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களின் பெரும்பான்மையான வாக்குகளை கொண்ட பாமகவிடம் இருந்து பிரித்து திமுகவிற்கு கொண்டு ‌வரவே, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்கள், வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு வெளியிடவே வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம் வன்னியர்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு பற்றியும் சேர்ப்பார் என தெரிகிறது, அதிமுகவின் கூட்டணி பலமான பாமகவின் பலத்தை விழ்த்த மு.க.ஸ்டாலின் வகுத்திருக்கும வியூகமாகும்.

ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதனை தெளிவாக புரிந்து வைத்துள்ளார், அதாவது வடமாவட்டங்களில் பாமக செல்வாக்குடன் அதிமுக போட்டியிட்டால் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களை கைப்பற்றலாம் என்று அவரின் எண்ணம்,. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி முடியும் தருவாயில் சட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டால் வன்னியர்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு விழுந்துவிடும் என்பது முதல்வர் எடப்பாடியின் வியூகம். ஏனெனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய இடமே வன்னியர்கள் பலமிக்க தொகுதியான சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி ஆகும்,.

மூன்று ஆண்டுகாலம் எடப்பாடி அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் மீண்டும் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழக அரசியலில் வலம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் பல அதிரடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பாமக தங்கள் பலத்தை காட்டும் நோக்கில் அதிக தொகுதிகளில் போட்டியிட அதிமுகவிற்கு அழுத்தம் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது,.
இத்தகைய சூழ்நிலையில் வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு அறிவிப்பை அறிவித்துவிட்டால் பாமகவை எளிதாக சமாளித்து விடலாம் என்று முதலமைச்சர் எடப்பாடியின் கணக்கு.

எப்படி இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த கவர்ச்சி வாக்குறுதிகளை மக்களிடம் எடுபடாமல் வைக்க அதிமுகவும் கவர்ச்சி வாக்குகளை அள்ளி வீசும் என்பது தெளிவாக தெரிகிறது,. அதிலும் முக்கியமாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது அச்சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்,. அதனை நிறைவேற்றி விட்டால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு வன்னியர்கள் மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பார்கள் மேலும் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.