Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

#image_title

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு.
அதிமுகாவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில், திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மாநாடு பேருரை ஆற்றிய போது முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பல இடங்களில் கடுமையாக குற்றம் சாட்டி பேசி தனது வஞ்சத்தை நிறைவேற்றி கொண்டார்.
மாநாட்டில் பன்னீர் செல்வம் பேசுகையில், பேரறிஞர் அண்ணாவின் பெயரை பெற்றுள்ள அதிமுக சாதாரண இயக்கம் அல்ல. வீழ்வது நாமாகினும், வாழ்வது இயக்கமாகட்டும். அதிமுக தலைமை பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தொண்டர்களுக்கு எம்ஜிஆர் வழங்கினார். அதை ஜெயலலிதா உரிமையாக்கினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தினார்கள். இதன் மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் என்ற பெருமையை அதிமுக பெற்றது. எம்ஜிஆர் மறைந்தபோது, இந்த இயக்கத்தின் தொண்டர்கள் 16 லட்சம் பேராக இருந்தனர். அதை ஜெயலலிதா 1½ கோடி தொண்டர்களை கொண்ட எக்கு கோட்டையாக மாற்றினார்.
தொண்டர்களாகிய நீங்கள்தான் இந்த இயக்கத்தை தாங்கி பிடித்து கொண்டு இருக்கிறீர்கள். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என உண்மையான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை ஓட, ஓட விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
என்னை 2 முறை ஜெயலலிதா முதல்-அமைச்சராக நியமனம் செய்தார். 3-வது முறை சசிகலாதான்(சின்னம்மா) என்னை முதல்-அமைச்சர் ஆக்கினார். அந்த பதவியை திரும்ப கேட்டார்கள். நான் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. உங்களின் ஒருவனாக தொண்டனாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
எம்ஜிஆர் வழியில் தொண்டர்களாகிய உங்களில் ஒருவரை கழகத்தின் தலைமை பொறுப்புக்கு உட்கார வைக்க வேண்டிய தலையாய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஜெயலலிதா எனக்கு முதல்-அமைச்சர், நிதி அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், கழக பொருளாளர் போன்ற பதவிகளையெல்லாம் தந்து இருக்கிறார்.
நான் பொருளாளராக இருந்தபோது 2 கோடி பற்றாக்குறையில் கட்சி நிதி இருந்தது. அதை 256 கோடியாக ஜெயலலிதா உயர்த்தி காட்டினார். எனக்கு இருக்கிற பயமே, இன்று நயவஞ்சகத்தால் பதவிகளை கையில் வைத்து கொண்டு சட்டத்தின் மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் இன்று ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பச்சை துரோகம் செய்த நம்பிக்கை துரோகியை நமது இயக்கத்தில் தொடர்ந்து இருக்க விடலாமா? என தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். மிட்டா மிராசுகளும், ஜமீன்தார்களும் தான் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று சட்டவிதியை திருத்திய எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை துரோகத்துக்கு சாவுமணி அடித்தே ஆக வேண்டும்.
தொண்டன் தான் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும். ஒரு தனிமனித ஆதிக்கத்தில் இந்த இயக்கம் சென்றுவிடக்கூடாது. ஜனநாயக முறையில் இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெறுகிற இயக்கமாக இருக்க வேண்டும். அது தான் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் நாம் செய்கிற நன்றி கடனாக இருக்க வேண்டும். தொண்டர்களின் உழைப்பு எங்களுக்கு தேவை. தாக்குதல்களை நாங்கள் தாங்கி கொண்டு தொண்டர்களை பாதுகாப்போம் என பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
Exit mobile version