எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

0
427
#image_title

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகள் தற்போது இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. அந்த வகையில் தங்களுடைய அரசியல் எதிரிகள் இரு அணியாக பிரிந்துள்ளது திமுக தரப்புக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பான திமுகவை அட்டாக் செய்வதை விட தங்களுக்குள் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொள்வது மேலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்வது போல அமைந்துள்ளது.

சமீபத்தில் விழுப்புரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதே போல அதிமுக ஆட்சியை பாமக தான் காப்பாற்றியது எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் விழுப்புரத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடும் முரளி சங்கரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில் விக்கிரவாண்டி பகுதியில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு பாமகவை விமர்சிக்க தகுதியே கிடையாது. அதிமுகவுக்கு கூட்டணியில் இருந்தால் தியாகி கூட்டணியை விட்டு போனால் துரோகியா? 2019 தேர்தலில் கூட்டணியில் இல்லாமல் போயிருந்தால் அதிமுக ஆட்சி அப்போவே கவிழ்ந்திருக்கும். அதிமுக நம்மை ஏமாற்றி விட்டனர்.

இட ஒதுக்கீடு ரத்து

தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும் நாளில் அவசர அவசரமாக வன்னியர்களுக்கு 10.5 உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் போதிய தரவுகள் இல்லாமல் கொண்டு வரப்பட்டது என இச்சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அதிமுகவினர் திட்டமிட்டே கடைசி நேரத்தில் இந்த சட்டத்தை கொண்டு வந்து ஏமாற்றி விட்டனர். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி ஏதோ தியாகி போலவும், இதை தானே கொண்டு வந்தது போலவும் பேசி வருகிறார்.

அதிமுக பதிலடி:

இந்நிலையில் அன்புமணியின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.அந்த வகையில் அதிமுக வேட்பாளர் ஜெ.பாக்யராஜை ஆதரித்து பேசிய அவர்,” அதிமுகவுக்கு யார் யார் துரோகம் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நல்லது செய்தவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். துரோகம் செய்தவர்கள் வீழ்ந்து போயிருக்கின்றனர் என்று அவர் பேசியுள்ளார்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு:

சாதி மதத்துக்கு அப்பாற்பட்ட அதிமுக மதத்தால், மொழியால் மக்களை பிரிக்காமல் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறுபான்மை மக்களின் அரணாக விளங்கி வருவதை அம்மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் நிச்சயம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கும். ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று சொல்லும் பாஜகவுடன் சிலர் கூட்டணி வைத்துள்ளனர் என பாமகவை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கூட்டணி கட்சிகளிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சியாக அதிமுக உள்ளது. ஆனால் நம்முடன் கூட்டணி வைத்தவர்கள் சந்தர்ப்பவாதத்தால் இப்போது கூட்டணி மாறியுள்ளனர். பாமகவுக்கு நாங்க போட்ட பிச்சை தான் எம்பி பதவி என்றும் அவர் பேசியுள்ளார். அதிமுக ஆட்சியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தோம் ஆனால் பாஜக அதை நடத்த முடியாது என்று கூறியுள்ளனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இது பாமக அதிமுக இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.