டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்களினால் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இணைந்து அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தனர். இதன் மூலமாக அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கம் வரவைத்து விடலாம் என்றும் திட்டமிட்டனர். ஆனால் அரசியல் நகர்வுகள் இதற்கு எதிராக அமைந்து கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்து கொள்ளவே தினகரன் தரப்பு கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. அந்த அளவிற்கு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்ட தினகரன்,அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்குத் தனிச் சின்னம் வாங்க முயற்சி செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடத்தப்படும் இந்த தேர்தலில் அந்தச் சின்னத்தைக் கட்சியின் பொதுச் சின்னமாக்கி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் மோதிப் பார்த்து விடலாம் என்று திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதை எப்படியோ அறிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு,அமமுக கட்சிக்காக தினகரன் குக்கர் அல்லது பரிசுப்பெட்டி சின்னத்தைத் தான் கேட்பார் என்று தெரிந்து கொண்டு, மாநில தேர்தல் ஆணையத்தின் லிஸ்டில் இந்த இரண்டு சின்னமும் இல்லாதபடி செய்து, தினகரன் தரப்புக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தினகரனின் கட்சிக்கு தனியாக ஒரு பொதுச் சின்னத்தை எங்களால் ஒதுக்க முடியாது. இதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தைத் தான் அவர்கள் அணுக வேண்டும் என்று 11 ஆம் தேதி மாலை மாநிலத் தேர்தல் ஆணையமும் கூறி தன் பங்கிற்கு தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதன்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகி இனிமேல் தனிச் சின்னத்தை வாங்க போதுமான நேரம் இல்லாததால், நடைபெறவுள்ள இந்த 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் மீண்டும் சுயேட்சையாகப் போட்டியிடும் கட்டாயத்தில் இருக்கிறார் தினகரன். இதனால் தினகரன் தான் போட்ட திட்டம் எதுவும் நடக்கவில்லை என்று குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.