சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. இதில் உச்சகட்ட பிரச்சனையாக சமீபத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை உருவாகியுள்ளது.
கடந்த ஜூலை 11 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாய் வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் செய்வதறியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் தலைமை பொறுப்பிற்கான நாற்காலியை பிடித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தை கலைத்து விட்டார் என்றே கூறப்படுகிறது.
கட்சிக்கு வெளியிலிருந்து பார்ப்பதற்கு எடப்பாடியின் கை ஓங்கியிருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் கட்சியின் பெருவாரியான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கிறது. இந்த விசயத்தில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அவர் பக்கம் வெகு சில நிர்வாகிகளே இருக்கின்றனர். அவர்களும் அவரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர் சாதி அரசியலை கையிலெடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவ்வப்போது தொண்டர்கள் படை நேரில் சந்தித்து அவருக்கும் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது.
அதிமுகவில் இவ்வாறான பிரச்சனை தான் தற்போது நிலவி வருகிறது. ஆனால் உள்ளுக்குள் எடப்பாடி போட்டு வைத்த திட்டங்கள் எதுவும் எடுபடவில்லை என்று குமுறிக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் மீண்டும் சேர்த்தது முதல் அவர் தன்னை பாஜக ஆதரவாளராக காட்டிக் கொண்டிருந்தது அதிமுகவில் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுகவை பாராட்டி பேசியது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில் ஓ.பி.எஸ் காட்டிய கெடுபிடி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டார். அதன் அடிப்படையில் ஓ.பி.எஸ்சை கட்சியிலிருந்து நீக்கிவிட்டால் ஒற்றை தலைமை என தான் கட்சியை கைப்பற்றி விடலாம் என திட்டமிட்டு அவரை நீக்கினார். ஆனால் அவரை நீக்கியதால் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் அதிமுக அதிருப்தி அடையும் சூழல் உருவானது.
அதை சரிகட்டும் விதமாக கட்சியின் துணை பொதுச் செயலாளர், பொருளாளர், சட்டமன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே அவர் ஒதுக்கினார். ஒற்றை தலைமை விவகாரத்தை ஆரம்பித்து அதற்கு கடைசி வரை ஆதரவாக செயல்பட்ட ஜெயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என அவர்களுடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் முக்குலத்தோர் சமூகத்தை கவர போட்ட அவருடைய இந்த பிளான் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை தேவர் ஜெயந்தி விழாவில் கண்கூடாக பார்க்க முடிந்ததாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்கவில்லை.அவருக்கு பதிலாக அவர் சார்பில் கலந்து கொண்ட ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக விழாவில் சிலர் கொந்தளித்தனர் என்பது எடப்பாடி தரப்பை அந்த சமூகத்தினர் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் விழாவில் வெள்ளி கவசத்தை அளித்து ஓ.பன்னீர்செல்வம் அங்கு தன்னுடைய இருப்பை உறுதிசெய்து கொண்டார்.மேலும் இதன் மூலமாக தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கையும் நிரூபித்தார். ஆனாலும் அவருக்கும் அங்கு எதிர்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுவரை சமூகத்தின் மீது அக்கறையில்லாத இவர் தற்போது அரசியலில் செல்வாக்கு இல்லாமல் போனதால் தான் இந்த பக்கம் திரும்பியுள்ளார் என ஒரு தரப்பு விமர்சித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி உள்ளிட்டோருக்கு கட்சியில் முக்கிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்த அவர்களுடைய ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இத்தகைய பின்னடைவுகளை சரி செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ஒரேவழி நீதிமன்ற வழக்குகளை முறியடிப்பது தான்.இதை உணர்ந்த அவர் நீதிமன்ற வழக்கை முறியடித்து எப்படியாவது கட்சி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி விட வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த வழக்குகளை சமாளிக்க வழக்கறிஞர்கள் குழுவுடன் ஈபிஎஸ் தொடர்ந்து பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது யானை பலத்துடன் இருந்த அதிமுக இப்படி உட்கட்சி பிரச்சனையில் சிக்கி தவித்து வருவதை கண்டு அதிமுகவின் இரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி வருகின்றனர்.