இப்படியே விட்டா கூடாரம் காலி ஆகிவிடும் என கடிவாளம் போட்ட இபிஎஸ்!
தமிழ்நாட்டில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகள் பலர் வரிசையாக திமுக பக்கம் செல்வது அதிமுக தலைமைக்கு பயங்கர நெருக்கடியை கொடுத்துள்ளது. முக்கியமாக கவுன்சிலர்கள் பலரும் திமுக பக்கம் சென்று இருப்பது அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
திமுக, அதிமுக இரண்டும் இந்த தேர்தலுக்காக ஏற்கனவே மாவட்ட செயலாளர் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டு, தீவிரமாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின், சில மாத இடைவெளியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடக்கும். வரிசையாக நடக்க உள்ள இந்த தேர்தல்களைதான் திமுக குறி வைத்துள்ளது.
பெரும்பாலும் டிசம்பர் மாதம் இந்த நகராட்சி தேர்தல் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக திமுக தமிழ்நாடு முழுக்க கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதை முன்னிட்டு அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை திமுக தரப்பு தன் பக்கம் இழுத்து வருகின்றது. ஒரு பக்கம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் முன்னாள் எம்.பி விஜிலா போன்ற நிர்வாகிகள் திமுக பக்கம் தாவி விட்ட நிலையில் இவர்களுடனான ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அதிமுகவிலிருந்து திமுக பக்கம் சென்றுவிட்டனர்.
முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் சென்றுவிட்டனர். மொத்தமாக கரூர் அதிமுக கூடாரம் காலியாகும் அளவிற்கு 10 கவுன்சிலர்கள் வரை அதிமுகவிலிருந்து திமுக பக்கம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிமுக தரப்பிற்கு தேர்தல் சமயத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கொங்கு மண்டல மாநில செயலாளர்களை விரைவில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் இருந்து வெளிவரும் நிலையில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் அது சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக இந்த கூட்டம் நடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில்தான் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. இந்நிலையில் கொங்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் இபிஎஸ் ஆலோசனை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
நிர்வாகிகள் கட்சியை விட்டு போகாத வகையில், அவர்களுக்கு கடிவாளம் போடும் எண்ணத்தில் இபிஎஸ் இந்த கூட்டத்தை நடத்துவார் என்றும் விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அவர்களின் குறைகளை கேட்டு இனி யாரும் திமுக பக்கம் செல்லாத வகையில் இவர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
கொங்கு மட்டுமே தற்போது அதிமுக வலுவாக இருப்பதால், அங்கும் நிர்வாகிகள் வெளியேறிவிட்டால் அதிமுக சறுக்கி விடும் என்பதன் காரணமாக இபிஎஸ், இந்த ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இந்த தேர்தலில் ஊரக உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் திமுக வென்றால் அது சசிகலாவின் ஆதிக்கத்திற்கு வழி வகுத்து விடும் என்பதாலும், சசிகலா கை ஓங்கி விடும் என்பதாலும், ஈபிஎஸ் இந்த கூட்டத்தை விரைவில் நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.