முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமியின் சூளுரை! தமிழகமெங்கும் எதிரொலிக்கும் முழக்கம்!

0
113

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான பிரச்சனை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இருக்க முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடிபழனிசாமி கழகத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்! புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்’ என்று சூளுரைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது அறிக்கையில், ‘விவசாய வீட்டில் பிறந்த என்னையும்  உழைத்தால் முதல்வராக முடியும் என்று இந்த எளியவனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி வினாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்’ என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘வெறும் எழுத்துக்களால் நான் உரைக்கும் நன்றி நின்று விடாது. 2021 ஆம் ஆண்டில் அரசியல் புரட்சியை கழக உடன்பிறப்புகள் ஆகிய உங்களின் ஒத்துழைப்போடு நாம் நிறைவேற்றிக் காட்டுவோம்’ என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதையடுத்து அவர் அறிக்கையில், ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் எம்ஜிஆரின் பொன்மொழிகளுக்கு ஏற்ப பாடுபட்டு ஆட்சியை பிடிப்போம்’ என்று எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.