இந்த விவகாரத்தில் அரசுக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

0
110

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது, அதன் நிறைவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த கட்சி உறுப்பினரே தற்சமயம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கான மத்திய அரசின் அரசாணை என்னிடம் உள்ளது என்று தெரிவித்தார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை இதற்கு பதிலளிக்க முயற்சி செய்தார் ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கு பதில் அளித்து பேசிய சபாநாயகர் நீட் தேர்வு குறித்து அவையில் நிறையவே பேசி விட்டோம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரையில் நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை என்று இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். தற்சமயம் நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டி இருக்கிறார். ஆகவே இந்த கூட்டத்தில் உங்களுடைய கருத்தை தெரிவியுங்கள் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தமிழகத்திற்காக இப்போதும் ஒருமித்த கருத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தார்

இதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் நிச்சயமாக ஒத்துழைப்பு வழங்குவோம், கடந்த ஆட்சி காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அதன் மூலமாக 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்கள். தமிழகத்தில் 40 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் உரையாற்றிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக இரண்டு கட்சிகளும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருக்கிறோம். அனைத்து கட்சி கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுப்போம் என்று தெரிவித்தார். இதனை அடுத்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் நுழைவுத்தீர்வையே நுழையவிடாமல் செய்தவர் தலைவர் கருணாநிதி, நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் வந்தாலும் அதனை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தவர் தலைவர் கருணாநிதி என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய சபாநாயகர் நீட் தேர்வு குறித்த ஒருசில கருத்துக்களை கூறினார் அப்போது குறுக்கிட்டு உரையாற்றிய அவை முன்னவர் துரைமுருகன் இங்கே ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும், இடையேதான் விவாதம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர் என்னை எதற்காக பிடித்து கொடுக்கிறீர்கள் என்று சிந்தித்தார். இதன் காரணமாக மறுபடியும் சிரிப்பலை எழுந்தது .