எரிக்கப்படும் மோடியின் உருவ பொம்மை! கொந்தளித்த பாஜக!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்படுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் இறுதியில் புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக 50 அடி உயர உருவ பொம்மை எரிக்கப்படும். தற்போது எரிக்கப்படும் இந்த பொம்மையானது பிரதமர் மோடியை ஒத்திருப்பதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொச்சியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடைபெறுவதால் இந்த விழாவில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கலந்துக் கொள்வர். இந்த விழாவானது பாரம்பரிய முறைகளை போற்றுவதுடன் குழந்தைகளை கவரும் விதமாக டிசம்பர் 31 அன்று மிகப்பெரிய 50 அடி உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்படும். இதற்காக இந்த விழா நடைபெறும் இடத்தில் மிகப்பெரிய உருவ பொம்மை ஒன்று நிறுவப்படும்.
அதேபோல் இந்த ஆண்டும் கொச்சியில் பொம்மை நிறுவப்பட்டது. இந்த பிரம்மாண்ட பொம்மை மோடியின் உருவத்தை ஒத்திருப்பதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உருவ பொம்மை மோடியின் உடை மற்றும் அவரது சாயலில் இருப்பதால் இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் பொம்மை நிறுவப்பட்ட இடத்திற்கு வந்து பொம்மை கட்டுமான பணிகளை நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் முடிவில் பொம்மையின் முகத்தை மாற்றிக் கொள்வதாக கூறியதை அடுத்து போராட்டம் நடத்திய பாஜகவினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
கேரளத்தில் நடைபெறும் கொச்சி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழைய துன்பங்கள், மற்றும் இழப்புகளை ஆண்டின் இறுதி நாளோடு வைத்து எரித்து புதிய ஆண்டினை சந்தோசத்துடன் வரவேற்கும் விதமாக பாரம்பரிய முறைப்படி 50 அடி உருவ பொம்மை எரிக்கப்படுவது இந்த விழாவில் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.