முதல்வர் தொடர்பான அவதூறு விவகாரம்! ராசாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

0
132

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் தற்போது தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக திமுகவை சார்ந்த துணை பொதுச்செயலாளர் ராசா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும், அவருடைய தாயார் தொடர்பாகவும் பல அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழகம் முழுவதிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது.

இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு தமிழகம் முழுவதிலும் கிளம்பவே அதற்கு ராசா விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அந்த விளக்கம் உப்புச்சப்பற்ற நிலையில் இருந்தது. அதோடு அவர் தெரிவித்த விளக்கத்திலும் கூட அவர் சொன்ன கருத்தில் இருந்து சற்றும் மாறுபடாமல் தெரிவித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.இதனால் தமிழகம் முழுவதிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து ஆங்காங்கே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதிக்க தொடங்கினார்கள்.இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்கு காவல்துறையினர் தயாராக இருந்த சமயத்திலும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிதானமாக யோசித்து தற்போது வழக்கு போடுவது சரியல்ல என்று அதனை மறுத்து விட்டார்.

எனினும் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு படம் புகார் அளிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட அவர் இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆகவே மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு சத்யபிரதா சாகு விவரங்களை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு தனிநபர் விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிராக இருக்கும் என்ற காரணத்தால், இந்த அறிக்கையை அனுப்பியிருக்கிறோம் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் பிரசாரத்திற்காக தாராபுரம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெண்கள் தொடர்பாக அவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அந்த நோட்டீஸில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக உங்களுடைய விளக்கத்தை இன்று மாலைக்குள் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.