ஒருவருக்கு இனி இத்தனை பாட்டில் சரக்கு தான்… டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு கட்டுப்பாடு…!

0
188
Tasmac

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பிரச்சாரம், பொதுக்கூட்டம் என கூட்டம், கூட்டமாக குவியும் தொண்டர்களை குஷியாக்குவதற்கு கோழி பிரியாணியும், குவாட்டாரும் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரம் என்றாலே பணத்தை விட அதிக அளவில் மதுபானங்களின் விநியோகம் தான் களைக்கட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகல் பாராமல் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் தீயாய் பரவும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வைக்க நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. வருமான வரித்துறையினரோ முக்கிய புள்ளிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு நடத்தி கட்டுக் கட்டாய் பணத்தை அள்ளி வருகின்றனர்.

இப்படி பல தடலாடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையத்தின் பார்வை தற்போது டாஸ்மாக் கடைகள் பக்கம் திரும்பியுள்ளது. குடிமகன்களை மதுவில் குளிப்பாட்டும் அரசியல் கட்சியினருக்கு குட்டு வைக்கும் விதமாக உச்சகட்ட கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு நபருக்கு 5 பாட்டில்களுக்கு மேல் விற்க கூடாது என்றும், தனி நபருக்கு பெட்டி, பெட்டியாக மதுவிற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இனி ஒருவருக்கு 2 புல் பாட்டில்களுக்கு மேல் விற்க கூடாது என்றும், குவாட்டராக இருந்தால் 8 பாட்டில்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு கடையிலும் 30 சதவீதத்திற்கு மேல் மது விற்பனை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.