இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் தலா இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது, 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்களில் அவர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக இருப்பது பரிசீலனையின்போது தெரிய வந்தது. எனவே அவர்கள் மூன்று பேரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதன் காரணமாக அந்த மூன்று வார்டுகளிலும் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 1-வது வார்டுக்கான விவரங்களை மட்டும் அறிவிப்பு பலகையில் ஒட்டினர். மற்ற இரண்டு வார்டுகளுக்கான விவரங்களை வெளியிடவில்லை.
இதனால் அந்த இரண்டு வார்டுகளின் வேட்பாளர்கள், மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்றைய முன்தினம் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
இந்நிலையில், காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வாபஸ் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அதனை தொடர்ந்து, 1, 2, 12 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அந்த மூன்று வார்டுகளிலும் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களை போட்டியின்றி தேர்வானதாக அறிவித்து, அதற்கான சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே நள்ளிரவு ஒரு மணியளவில், கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நகல் ஒட்டப்பட்டது. அதில், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.