இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

0
117
Nitin Gadkari

இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையில் மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

டெல்லியில் இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது.

இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அந்த மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தும் வகையில் சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்டவைகளை கொண்டு சார்ஜ் ஏற்றும் மையங்கள் உருவாக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து சோலார் மின்சார சப்ளையுடன் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறோம். அந்த சாலைகளில், ஆகாய மார்க்கமாக மின்வழிப்பாதை செல்லும். இவ்வாறு அமைக்கப்படும் அத்தகைய சாலைகள் வழியாக செல்லும் மின்சார கனரக லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ‘சார்ஜ்’ ஏற்றிக் கொள்ளலாம்.

மேலும் சுங்க சாவடிகளையும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். நன்கு வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் பொருளாதார நடவடிக்கைகள் பெருகும். வர்த்தகம் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகும். ‘பிரதமர் கதிசக்தி’ திட்டத்தால், திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தளவாட செலவுகள் குறைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நெடுஞ்சாலைகள் அமைக்கும்போதும், விரிவாக்கம் செய்யும்போதும் மரக்கன்று நடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சுமார் 3 கோடி மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகளில் நடப் போகிறோம். தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, இதுவரை 27 ஆயிரம் மரங்களை அப்புறப்படுத்தி, வெற்றிகரமாக வேறு இடங்களில் நட்டு வைத்துள்ளோம் என்றார்.

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள். இந்திய தளவாடங்கள் துறையில் முதலீடு செய்ய அமெரிக்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அப்போது பேசினார்.