EMI செலுத்த மேலும் அவகாசம் – சலுகையை நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

0
123

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் பலரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வீட்டுக் கடன், தனி நபர் கடன், பொருட்கள் கடன் என எந்த தவணையையும் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, RBIயுடன் ஆலோசித்து மூன்று மாதங்களுக்கு (மே 31 வரை) தவணை நீட்டிப்பை அறிவித்திருந்தது. அதன் படி மூன்று மாத காலம் பயனாளர்கள் கடன் செலுத்த வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது. ஆனால் தவணை செலுத்தாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு அசலில் இனைத்து அது மாத தவணையாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது நிச்சயம் வங்கிகளுக்கு சாதகமான அறிவிப்பு தான் என்றாலும், தங்களை நிதி சுமையிலிருந்து தற்காலிகமாகக் காத்து கொள்ள பயனாளர்களுக்கு ஓர் வடிகாலாக இருந்தது.

இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது.

இதை கருத்தில் கொண்டும் இன்னும் மூன்று மாதங்களுக்கு தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கலாமா என RBI ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்தி காந்த் தாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக ஏற்கனவே அறிவித்த தவனை அவகாச காலத்தை மேலும் மூன்று மாதம் நீட்டிப்பதாக அறிவித்தார்.

இதனால் EMI செலுத்த ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு தற்போதைக்கு இதிலிருந்து விலக்கு கிடைத்துள்ளது.