ஆங்கில எழுத்து T யால் டீ கடைக்கு வந்த சோதனை! சீல் வைத்த திருப்பதி தேவஸ்தானம்
திருமலை திருப்பதி கோவிலில் டீ கப்பில் சிலுவை சினனம் இருந்ததாக கூறி புகார் எழுந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் டீ கடைக்கு சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலை திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. திருமலையில் அதாவது மலைக்கு கீழே இருந்து திருப்பதி மலைக்கு மேல் வருபவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே சாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். திருமலை திருப்பதி முழுவதும் உள்ள மக்கள் பெருமாளை மட்டுமே வணங்கி வருகிறார்கள்.
இதனால் இங்கு மற்ற தெய்வங்களின் புகைப்படங்கள் கொண்டு வருவதற்கோ, கட்சிக் கொடி, மற்ற மதத்தின் கொடிகள், சின்னங்கள் ஆகியவற்றை காரில் மாட்டி வருவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கு கீழே சோதனைச் சாவடிகளில் சோதனை செய்யப்படும் பொழுது பக்தர்களின் காரில் வேறு எந்த ஒரு கடவுளின் ஸ்டிக்கரோ அல்லது கட்சிக் கொடி, வேறு மதத்தின் கொடிகள் இருந்தால் அவர்களை அப்படியே திருப்பி அனுப்பி விடுவார்கள்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அருகே உள்ள டீ கடையில் சிலுவை சின்னம் இருந்ததாக கூறி அந்த கடைக்கு தேவஸ்தான அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். டீ வழங்கப்படும் பேப்பர் கப்பில் ஆங்கில எழுத்து T-யை சிறிது மாடர்னாக டீகடைக்காரர் அச்சடித்திருந்த நிலையில் அது சிலுவை சின்னமாக மற்றவர்களின் கண்களுக்கு தெரிந்துள்ளது. அதே சமயம் பேப்பர் கப்பில் சிலுவை சின்னம் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் தேவஸ்தான அதிகாரிகள் அந்த டீ கடைக்கு சீல் வைத்தனர்.