திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! அதிர்ச்சியில் திமுக தலைமை

0
147

திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! அதிர்ச்சியில் திமுக தலைமை

திமுக எம்.பி கனிமொழி வெற்றிக்கு எதிராக அப்போதைய தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தவரும்,தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவருமான தற்போதைய தெலுங்கானா ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பதில் தூத்துக்குடி வாக்காளர் தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்ற பின் தங்களுக்கு இந்த வழக்கால் பெரிய பிரச்சினை இருக்காது என்று எதிர்பார்த்திருந்த திமுக தலைமைக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றார். கனிமொழியின் இந்த வெற்றியை எதிர்த்து முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவில், கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள். அவர்கள் வருமான விவரங்கள் பொருந்தாது என்று வேட்பு மனுவில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் கனிமொழி சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் சான்றிதழ்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் இணைக்க வில்லை. அவருடைய வேட்பு மனு குறைபாடுடையது. எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் கனிமொழிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற்றார். இதனால் திமுகவிற்கு வரவிருந்த பிரச்சினையும் தீர்ந்தது என அக்கட்சியின் தலைமை நிம்மதி அடைந்தது. ஆனால் இது குறித்து பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, அந்த தொகுதி வாக்காளரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கனிமொழிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அப்போது வழக்கைத் திரும்பப் பெற்றதால், தமிழிசை வழக்கு செலவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் வழக்கு வாபஸ் பெற்றதாகத் தெரிவித்து அவரது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.ஆனால் கனிமொழிக்கு எதிரான இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.