பாரம்பரிய இறால் முருங்கைக்கீரை குழம்பு வைக்கும் முறை
சமையல் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம்.அயல் நாட்டு உணவுகளின் வருகையால் நம் நாட்டு பாரம்பரிய உணவு முறைகளை மறந்துவிட்டோம். நம் முன்னோர்கள் காலத்தில் சமையல் கலையில் பெண்கள் சிறந்து விளங்கினார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் 100 இல் 80 பேர் சமையல் தெரியாதவர்கள் . அக்காலத்தில் பெண்கள் உணவை சுவையாக சமைப்பது மட்டுமன்றி அதை அன்போடு பரிமாறி குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு உண்பார்கள்.
அதுமட்டுமன்றி அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை பற்றி பேசி குடும்பத்தினரோடு சிறிது நேரம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.ஆனால் இன்றோ ஆன்லைனில் ஆர்டர் செய்து சமையல் கலை என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டோம். இனி கவலை வேண்டாம் , நம் பாரம்பரிய உணவை நம் வீட்டிலேயே செய்து உண்ணலாம்.
பாரம்பரிய இறால் முருங்கைக்கீரை குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் – 500 கிராம்.
வெங்காயம்- 200 கிராம்.
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி.
பட்டை, கிராம்பு – 4.
கசகசா தூள் – 1 தேக்கரண்டி.
கறிவேப்பிலை- சிறிதளவு.
தக்காளி- 250 கிராம்.
வெண்ணெய்- 2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி.
உப்பு – தேவைக்கேற்ப
முருங்கைக்கீரை – 2 கைப்பிடியளவு.
தேங்காய் விழுது – 1 மேஜைக்கரண்டி.
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி.
பொரிகடலை தூள்- 1 மேஜைக்கரண்டி.
பச்சைமிளகாய் விழுது- 1 மேஜைக்கரண்டி.
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.முருங்கைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு கரைந்ததும் பட்டை கிராம்பு போட்டு வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பொடியாக நறுக்கிய தக்காளி, சோம்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், இறால் , முருங்கைக்கீரை, கசகசா தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கி விடவும். நன்றாக கொதித்து, இறால் வெந்ததும் பொரிக்கடலை தூளைத் தூவவும். கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இறக்கி பரிமாறலாம்.