ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்!

0
179

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து அவரது தொகுதியான ஈரோடு கிழக்கு காலியானதாக சட்டப்பேரவை செயலகம்  தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்‌. இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனை அடுத்து அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிற அரசியல் தலைவர்களும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனவரி 9- ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.