ரஷ்யா, உக்ரைன் மீது ஆக்ரோஷமாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரானது 6வது நாளாக நீடித்து வருகிறது.
இதன்காரணமாக, உக்ரைன் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அந்த நாட்டிலிருக்கும் மற்ற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் உடனடியாக காலி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் உக்ரைனில் இந்தியர்கள் 20000 பேர் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் அனுப்பப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்கள் அனைவரையும் மீட்டு வருகிறது மத்திய அரசு.
இதற்கிடையில், நேற்று உக்ரைனில் நடைபெற்ற போரின்போது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் பலியானார் இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா உடனடியாக இந்தியாவிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட தூதரகங்களுக்கு சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், உக்ரைனிலிருந்து 12000 இந்தியர்கள் வெளியேறிவிட்டார்கள். அதில் பாதிப்பேர் உக்ரைன் நாட்டு எல்லையை கடந்து விட்டார்கள் என்றும், பாதிப் பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்தாகி விட்டது என்றும், தெரிவிக்கப்படுகிறது.எஞ்சிய 40 சதவீதம் நபர்கள்தான் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதால் அந்த நகரில் இருந்து இந்திய தூதரகம் மூடப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் உக்ரைனின் மேற்கு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள் என்றும் தெரிகிறது.
இந்தநிலையில், 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்த நாடு மீது போர் தொடுத்திருக்கிறது இதனை தொடர்ந்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலமாக அவர் உரையாற்றினார் என்று தெரிகிறது.
அப்போது அவர் பேசியதாவது, உக்ரைன் மக்கள் வறுமையான அவர்கள் நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கின்றோம். நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள், எங்களை எப்போதும் கைவிட மாட்டீர்கள் என்று நிரூபியுங்கள், நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும் என்று அவர் பேசினார்.
அவருடைய உரை முடிவடைந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்திருக்கிறது.