முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!

0
197
#image_title

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய ஆவின் நிறுவன வேலை வாங்கித் தருவதான மோசடி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை 6 மாதங்கள் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்கவும், ஜாமீன் நிபந்தனையை தளர்த்தவும் கோரிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய ஆவின் நிறுவன வேலை வாங்கித் தருவதான மோசடி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க டிஜிபி பரிந்துரைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் என்பதால் ஆளுநரிடம் ஒப்புதல் பெற ஆறு மாதம் ஆகும் என தெரிவித்து அவகாசம் கோரினார்.

தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் வகையில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கிரி வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு வழங்கிய ஜாமீனை 6 மாதங்கள் வரை நீட்டித்தது.

தமிழ்நாட்டுக்கு வெளியே செல்ல வேண்டும் பட்சத்தில் அது தொடர்பாக அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.