டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

0
145

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்கச்சாவடியில் முன்னாள் எம் எல் ஏ பாலபாரதி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் பால பாரதி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னாள் எம் எல் ஏ ஆவார். இவர் கும்பகோணத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக காரில் சென்றுள்ளார். அப்போது மணவாசி எனும் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் அவர் கார் நின்றபோது தனது முன்னாள் எம் எல் ஏ அட்டையைக் காட்டியுள்ளார்.

ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரிடம் அதை ஏற்க மறுத்து பணம் கட்ட வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஊழியர் ஒருவர் இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் காரின் முன் மிரட்டுவது போல நின்றுள்ளார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த சுங்கச்சாவடி அருகே இருந்த புறக்காவல் நிலைய போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்த பாலபாரதியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கனகராஜ் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் சுங்கச்சாவடியில் துப்பாக்கியைப் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது என்றும் இது சம்மந்தமாக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.