Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

+2 மாணவர்களே இப்படி தான் உங்க மார்க்க கணக்கிட போறாங்க! – ஜூலை 31க்குள் தேர்வு முடிவு! முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக 2020 21 ஆம் ஆண்டு நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

அதன்படி பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப் பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை கொண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி
1. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்கள் உடைய சராசரி 50 சதவிகிதமும்.
2. பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) 20 சதவிகிதமும்.
3. பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீடு பிராக்டிகல் மற்றும் இன்டர்நல் 30 சதவிகிதமும்

இந்த அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

1. பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத்தேர்வு (20) அகமதிப்பீடு( 10) என மொத்தம் 30 க்கு பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
2. செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில்( 10) பெற்ற மதிப்பெண், 30 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
3. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
4. 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
5. கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத்தேர்வில் ஏதேனும் தோல்வி அடைந்திருந்தாலும் அல்லது தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலும் மாணவர்களுக்கு தற்போது அந்தத் தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.
6. 11ஆம் வகுப்பு எழுத்துத்தேர்வு அகமதிப்பீடு செய்முறை தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு அகமதிப்பீடு செய்முறை தேர்வு ஆகிய தேர்வுகளின் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படும்.
7. ஒவ்வொரு மாணவர் உடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணையின்படி ஜூலை 31-ஆம் தேதிக்குள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்
8. மதிப்பீட்டில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதப்படும் மாணவர்களுக்கு விரும்பினால் பன்னிரண்டாம் வகுப்பு எழுத்து தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண் அவர்களது இறுதி மதிப்பெண்களாக கருதப்படும்.
9. தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரவல் சீரடைந்த உடன் தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும் இதற்கு கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

Exit mobile version