சென்னை மெரினா கடற்கரையில் வழக்கறிஞர்கள் பாஸ்ட் புட் உணவகத்தில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கடற்கரையில் ஒரு காதல் ஜோடி தகாத முறையில் அத்துமீறிய செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை கண்ட வழக்கறிஞர்கள் சுற்றுலா பயணிகளும், பெண் குழந்தைகள் உள்ளிட்டோரும் வரும் இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று அந்த காதல் ஜோடியை தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னுடைய காதலி முன்பே அசிங்கப்படுத்தியதாக கருதிய இளைஞர் தன்னுடைய நண்பர்களை கைபேசியின் மூலமாக அழைத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேரும் வழக்கறிஞர்களை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.
இதில் ராயபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரதீப் மற்றும் மற்றொரு வழக்கறிஞர் நாகராஜ் உள்ளிட்ட இருவரின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட.சொட்ட படுகாயமடைந்த இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் தப்பியோடிய குற்றவாளிகளையும், காதல் ஜோடியை தேடி வருகிறார்கள்.