Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜப்பான் நாட்டில் துப்பாக்கி சூடு! உயிர் பிழைப்பாரா முன்னாள் பிரதமர்?

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் ஜப்பானின் பிரதமராக பணியாற்றியவர். அவர் அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அந்த நாட்டின் நரா என்ற நகரத்தில் அவர் இன்று நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் போது ஷின்சோ அபே பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மறைந்திருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் ரத்த காயத்துடன் அவர் சுருண்டு விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதில் அவருக்கு மார்பு பகுதியில் காயம் உண்டானது.

ஆகவே உடனடியாக அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படையைச் சார்ந்தவர்கள் படுகாயமடைந்து மயக்க நிலையிலிருந்த ஷின் சோ அபேயை மீட்டு அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன.

பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் துப்பாக்கிசூட்டுக்கு காரணமானவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சுட்டவர் யார்? எந்த காரணத்தை வைத்து அவர் அந்த செயலை செய்தார்? என்று இதுவரையில் அறியப்படவில்லை. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version