இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி
கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் ஜூலை 27ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று கே.ஒய்.சி விவரங்களை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனம் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா என்ற திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நாடு முழுவதும் பொதுவாக 800 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பிரதம மந்திரி உத்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் பிரதம மந்திரி உத்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு 372 ரூபாய் மாணியமாக வழங்கப்படுகின்றது. மற்றவர்களுக்கு 47 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள அனைவரும் இரண்டு வாரங்களில் கே.ஒய்.சி விவரங்களை செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதையடுத்து ஐஓசி, இண்டேன், பாரத் போன்ற நிறுவனங்களில் மக்கள் கேஸ் இணைப்பு பெற்றுள்ளார்கள். அவர்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கவே கே.ஒய்.சி செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் எண் மற்றும் கை ரேகை பதிவு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த கே.ஒய்.சி விவரங்களை சரிபார்க்க கேஸ் ஏஜென்சிக்கு வர முடியாமல் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வீட்டுக்கே சென்று செல்போன் மூலமாக முகப்பதிவு செய்ய வேண்டும் என்று கேஸ் ஏஜென்சிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
கடந்த மே மாதம் 30ம் தேதிக்குள் அனைவரும் கே.ஒய்.சி விவரங்களை சரி பார்க்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறுஞ்செய்தி வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது ஜூலை 27ம் தேதிக்குள் கட்டாயமாக கே.ஒய்.சி விவரங்களை சமர்பிக்க வேண்டும் என்று மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு “வரும் ஜூலை 27ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய கே.ஒய்.சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்” என்று குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.