Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்த போலி மருத்துவர்கள்! சோதனையில் இறங்கிய சுகாதார ஊழியர்கள்!!

#image_title

தூத்துக்குடி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செ.கற்பகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் குடிமை மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகநயினார், சுகாதார அலுவலர்கள் காமாட்சி, அருணாசலம், பெவின், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷகிலா ராணி ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தட்டப்பாறை பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரா(வயது 54) என்பவர் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவர் எந்தவித மருத்துவ படிப்பும் படிக்காமல் சிகிச்சை அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போன்று புதுக்கோட்டை பகுதியில் கமோண்டராக பணியாற்றிய கந்தப்பன்(78) என்பவர் மருத்துவ படிப்பு எதுவும் படிக்காமல் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களின் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன.

தொடர்ந்து போலியாக சிகிச்சை அளித்ததாக புதுக்கோட்டை, தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தப்பன், சந்திரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சுகாதார குழுவினர் மூலம் தீவிர சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Exit mobile version