கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாஜக உடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை என்றும் இது குறித்து அதிமுக தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்று கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு அவர்கள் திமுகவை கடுமையாக சாடி பேசினர்.
தங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் திரு.ஸ்டாலின் அவர்கள் அவரது ஆட்சியில் செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறார். அவரது ஆட்சியில் புதிதாக நலத் திட்ட பணிகள் எதுவும் தொடங்கப்பட வில்லை என்று கடம்பூர் ராஜு அவர்கள் விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டோம் என்று தெரிவித்த அவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறது என்று கூறி இருக்கிறார். நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம் பாஜகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்று. இந்த கள்ளத் தொடர்பு வைப்பதில் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது திமுகவிற்கு தான் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தான் அந்த முழு தகுதியும் இருக்கிறது என்று கூறினார்.
அடுத்து சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்பொழுதும் அதிமுகவிற்கு சாதகமாக தான் வரும் என்று தெரிவித்தார்.