பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பனைமரத்தை அடிப்படையாக கொண்டு சில குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் ராமர் என்பவரின் மகன் செல்லபாண்டி என்பவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். படதாசம்பட்டி என்னும் பக்கத்து கிராமத்தில் பதநீர் இறக்க மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்துபோன செல்லப்பாண்டிக்கு அழகான குடும்பமே உள்ளது. சகுந்தலா என்ற மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். யாரும் எதிர்பாராமல் நடந்த இச்சம்பவம் வெள்ளையம்பதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் உயிரிழந்த தொழிலாளிக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வெள்ளையம்பதி கிராமம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பனையேறும் தொழிலை பிரதான வேலையாக பல்வேறு குடும்பங்கள் செய்து வருகிறது. பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு மற்றும் வெல்லத்தை காய்ச்சி கருப்பட்டி செய்வது போன்றவற்றின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் பனைத் சார்ந்த தொழில் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.