பிரபல இயக்குனரின் மனைவி தற்கொலை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!!
பிரபல நெடுந்தொடர் இயக்குனர் O.N.ரத்னம். இவர் வளசரவாக்கம், அன்பு நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற தொடரை இயக்கி வருகிறார். இதற்கு முன்பாக வாணி ராணி, செவ்வந்தி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார். இவருடைய மனைவி பத்மாவதி.
இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களின் சொந்த ஊர் பொள்ளாச்சி. ரத்னமும், அவருடைய மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் ரத்னம் அவருடைய குடும்பத்துடன் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சென்றார்.
அங்கு பிள்ளைகளை தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு, ரத்னமும் அவருடைய மனைவியும் சென்னை திரும்பியுள்ளனர். பத்மாவதி, ரத்னத்திடம் வீட்டில் இருக்கும் நகைகளை வைத்து ஏதாவது தொழில் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு ரத்னம் நகைகளை வைத்து தொழில் செய்வதை விட சொந்த ஊரில் நிலம் வாங்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரத்னம் நேற்று முன்தினம் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டு அதிகாலையில் வீடு வந்துள்ளார். அப்போது மீண்டும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. அன்று காலை அவர்களுடைய பிள்ளைகளும் சொந்த ஊரில் இருந்து சென்னை வந்துள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக ரத்னம் பேருந்து நிலையத்திற்கு சென்றார்.
இருவரையும் அழைத்து கொண்டு வீடு திரும்பியபோது, பத்மாவதி வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக பத்மாவதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் பத்மாவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பத்மாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.