Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த “காவிரி மேலாண்மை வாரியத்தையும்” கை நழுவவிட்டது. 2018, பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு அடிப்படையிலான காவிரி நதிநீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்கு ஒரு “வரைவுத் திட்டத்தை” 6 வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் 3 மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்” எழுச்சி காரணமாகவும், உச்ச நீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், 2018, மே 18ம் ேததி “காவிரி வரைவு திட்டத்தை” அறிவித்தது மத்திய பாஜ அரசு. இதை தட்டி கேட்க வக்கில்லாமல் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தி கொண்டிருந்தது தமிழக அரசு.

இந்த ஆணையத்திற்கும் முழு நேர தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சி துறை செயலாளரையே “பொறுப்பு தலைவராக” நியமித்து இன்றுவரை மத்திய பாஜ அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவோ, தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்டவோ இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவும் எதுவுமே செய்யவில்லை. இந்த இரு அமைப்புகளும் “கூடி கலையும் அமைப்புகளாகவே” இன்றுவரை இருந்து வருகின்றன.

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை காவு கொடுத்து விட்டு, இந்த “உரிமை பறிப்பு வைபவங்களை” எல்லாம் ஒய்யாரமாக அனுமதித்து – மத்திய பாஜ அரசுக்கு பவ்வியமாக – பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது அதிமுக அரசு. வெறும் “எலும்புக்கூடு” அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது.

ஆனால், இந்த குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பாஜ அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை. கலைஞர் தலைமையிலான திமுக அரசு நடுவர் மன்றத்தை அமைத்து கொடுத்து – வலுவான வாதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை தமிழகம் பெற்றும் – “மழை பெய்தால் மட்டுமே காவிரி தண்ணீர்” என்ற மன்னிக்க முடியாத துரோகத்தை தமிழகத்திற்கு மத்திய பாஜ அரசு முன்மொழிய – அதை வழிமொழிந்து – விவசாயிகளையும், வேளாண் தொழிலையும் வஞ்சித்து கை கட்டி நிற்கிறார் முதல்வர் எடப்பாடி.

இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து – அது தன்னாட்சி அமைப்பு அல்ல – மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட “கைகட்டி” நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தட்டி பறிக்கும் செயல். காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல்.

ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர பிறப்பிக்கப்பட்டுள்ள அரசிதழை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய பேரமைப்புகளையும் சேர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும். முதல்வர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்” என கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு மேலும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு விளகம்மளிக்கும் வகையில் தமிழக பொதுப்பணித் துறை விளக்கமளித்துள்ளது.

அதில் “தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாக காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.

அதில் ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவேரி நடுவர் மன்றம் 5.2.2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையை கருத்தில் கொண்டு தான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவேரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.

மத்திய அரசு மே, 2019-ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.

இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவேரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.

மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவைகளை கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும். பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நடைமுறையாகும்.

இதனால், காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவேரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version