பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்! தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி!
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மக்களை பெரிதும் கவலை கொள்ள வைக்கிறது. மேலும் வாகனங்கள் வைத்துள்ள அனைத்து மக்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது தவிர ஒரு புறம் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்வதால் இல்லத்தரசிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதன் காரணமாகவும், அதனை நம்பியும் மட்டுமே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் பெட்ரோல் டீசல் மீது அதிகமான வாட் வரியை விதிக்கும் அரசு திமுக அரசுதான் என்றும் கூறினார்.
ஆனால் திமுக அரசோ விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டுமே குறை கூறுகிறது. மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. ஜிஎஸ்டியை கட்டுக்குள் கொண்டுவர தமிழக நிதியமைச்சர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கோரிக்கை வைப்பாரா? என்று நான் கேள்வி கேட்கிறேன் என்றும் கூறினார்.
மேலும் திமுகவின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவே அதிமுகவினர் தமிழகம் முழுவதிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதிமுகவின் இந்த போராட்டத்தை பாஜக வரவேற்கிறது என்றும் அவர் மனதார பாராட்டினார். அதிமுகவும், பாஜகவும் கூட்டணி கட்சிகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் இவ்வாறு கூறி இருப்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.