Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணியில் சேர்ந்த 25 ஆவது ஆண்டு விழாவை விமர்சையாக நடனமாடி கொண்டாடிய பெண் போலீசார்!

தமிழக காவல்துறையில் கடந்த 1997ஆம் வருடம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெண்கள் காவல்துறை பணியில் இணைந்தார்கள், அப்போது பணியில் சேர்ந்த பெண் காவல் துறையினர் கோவை மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள், அவர்கள் தங்களுக்குள் நட்பை காக்கும் விதத்தில் சங்கமம் கோவை நண்பர்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து இருந்தார்கள். அதில் அவர்கள் அடிக்கடி கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், அவர்கள் பணிக்கு வந்து 24 ஆண்டுகள் நிறைவடைந்து 25வது ஆண்டு ஆரம்பமானது. அதனை அவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு இடத்தில் கூடி உற்சாகமாக கொண்டாட முடிவு செய்தார்கள். அதன் அடிப்படையில் 78 பெண் காவல்துறையினர் கோவையை அடுத்த ஆனைகட்டி பகுதியில் இருக்கின்ற தனியார் சொகுசு விடுதியில் ஒன்று கூடினர், அப்போது பெண் காவல்துறையினர் அனைவரும் ஒரே நிறத்திலான சேலை அணிந்து இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய பணி, குடும்பம், உடல் நிலை தொடர்பாக நினைவுகளை பேசி மகிழ்ந்ததாக சொல்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பெண் காவல்துறையினர் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டார்கள், அதன் பிறகு சினிமா பாடலுக்கு ஏற்ப உற்சாகமாக நடனம் ஆடி தாங்கள் பணியில் சேர்ந்த 25வது ஆண்டு விழாவை கொண்டாடினர். இதனை அடுத்து பெண் காவல் துறையினர் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பணியில் சேர்ந்த வெள்ளி விழா ஆண்டில் 78 பெண் காவல்துறையினரும், மிக விரைவில் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version