எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை

0
160
Chennai High Court Questions About Anti Corruption Department

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை

கடந்த சில மாதங்களாக அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகாரமாகி வருகிறது. அந்த வகையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிக்க பிரச்சனை மேலும் பூதாகரமாகியது.

இந்நிலையில் தான் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கானது நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், இந்த வழக்கில் இடைக்கால தடை கேட்கும் மனுவை விசாரிக்காமல், நேரடியாக மேல்முறையீட்டு பிரதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீலும் ஏற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளை இறுதி விசாரணைக்காக இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள அந்த மேல்முறையீடு வழக்கில் தற்போது இறுதி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.