Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தாததையடுத்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதற்கட்டமாக சில திட்டங்களை அறிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

“விரிவான தொலைநோக்கு திட்டத்தைப் பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள். இந்த 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன.5 அம்ச திட்டங்களுடன் 20 லட்சம் கோடியிலான தன்னிறைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டங்கள் மூலம், இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகத்திற்கு உதவுவதாக இருக்கும்.

மின்னுற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் சுமார் 52,606 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியுதவி அளிக்கப்பட்டது. 2லட்சம் டன் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 6 கோடிக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன் பெற்றனர்.”

இதனைத் தொடர்ந்து அவர் அறிவித்த திட்டங்கள்:

சிறு குறு தொழில்களுக்கு பிணையற்ற கடன்கள் வழங்கப்படும். 31, அக்டோபர் 2020 வரை இந்தக் கடன்கள் வழங்கப்படும். சுமார் ரூ.3 லட்சம் கோடிக்கு கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கடன் தொகை 100% உத்தரவாதத்துடன் வழங்கப்படும். இந்தக் கடனுக்கான தவணைக் காலம் 4 ஆண்டுகளாகும்.

நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்பதற்கான முதலீட்டு வரம்பு உயர்வு 10 கோடியிலிருந்து 20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிகள் இனி உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் என்ற பகுப்புக்குள் வராது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சிறு குறு நிறுவனங்கள் இனி அரசின் கொள்முதல் பட்டியலில் இருக்கும். மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கு ஆன்லைன் வர்த்தகச் சந்தை அணுகுமுறை எளிமைப்படுத்தப்படும். வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்படும். அதற்கான பிணையை அரசே ஏற்கும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கான (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) PF தொகையை அரசே செலுத்தும். PF பங்களிப்பு தொகை தற்போதுள்ள 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 7 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இதற்காக ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டேன்ஜெட்கோ உள்ளிட்ட மின்னுற்பத்தி செய்யும் டிஸ்காம் நிறுவனங்களுக்கு 90,000 கோடி நிதியுதவி.

ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பந்தங்கள் கூடுதலாக 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம், சரக்குப் போக்குவரத்து ஆகிய துறைகள் இதில் அடங்கும்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கால நீட்டிப்பு. மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு கட்டுமானப்பணிகளைத் தொடங்கிய நிறுவனங்களுக்கு 6 மாத காலம் ஒப்பந்தம் நீட்டிப்பு.

TDS வரிப்பிடித்தம் 2021 மார்ச் வரை 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த அறிவிப்பு உதவும் இந்த வரிச்சலுகை நாளை முதல் அமலுக்கு வரும்.

Exit mobile version